“சாரட்டு வண்டில” பாடலைக் கேட்டதும் “அதென்ன சாரட்டு- சீரட்டு” என்று நண்பர்கள் சிலர் கேட்டார்கள்.

சாரட்டு – chariot – இயல்பாக சொல்ல வேண்டுமானால் குதிரை வண்டி

lyrical video-வில் இருந்த “saarattu vandila” என்பது “charattu vandila” என்று இருந்திருந்தால் அந்த கேள்வி எழுந்திருக்காது என்றே தோன்றுகிறது. அதனோடு பாடலின் உச்சரிப்பில் “ச்சாரட்டு” என்று ஒலித்திருந்தால் கொஞ்சம் எளிதாகியிருக்கும். பின்னர் தான் ரஹ்மான் இந்த “(சா – Saa) ஸா”  ஓசைக்கு குழந்தைத்தனமான ரசிகரென்று மதன் கார்கி ஒருமுறை சொன்னது ஞாபகம் வந்தது.

அடுத்தது,  “சீரட்டொளியில ஓரந்தெரிஞ்சது உம்முகம்”

கிராமப்பகுதிகளில் சிகரெட்டை ‘சீரட்டு’ என்று சொல்லும் வழக்கம் தான் இது. சீரட்டொளியில – cigarette – சிகரெட் ஒளியில்

  சிகரெட் ஒளி என்று எதுவுமிருக்கிறதா என்ன. அது சிறு பொறி. சின்ன சின்ன ஒளித்திட்டுகளின் சங்கமம்.
“சீரட்டொளியில ஓரந்தெரிஞ்சது உம்முகம்” – இருளில் அப்படி சிகரட் ஒளியில் கூட இயல்பாய் தெரிந்துவிடும் பளிச்சென்ற முகமென்று எடுத்துக்கொள்ளலாம்.
அப்படி இல்லையென்றால் “சீரட்டொளி போல தெரியும் முகம்” – அடர்ந்த கும்மிருட்டில் எதுவுமே தெரியாத நிலையில் யாரோ புகை பிடித்தால் அது மட்டும் தெளிவாக தெரியும். அது போல எத்தனை முகங்கள் இருந்தாலும் அந்த முகம் மட்டும் தனித்து தெளிவாக தெரிந்து விடுகிறது என்ற பொருள்.
“சூரியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ” என்று எழுதியவருக்கு சிகரெட் ஒளியெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

இந்த பாடல் முழுவதுமே துள்ளலும் கொண்டாட்டங்களும் நிறைந்திருக்கின்றன .

இந்த பாடலை கேட்கும்போது கொஞ்சம் “நெஞ்சினிலே” பாடலின் படிமங்களை இங்கு இணைக்க வேண்டியிருக்கிறது.
“சாரட்டு வண்டில” ஒரு மூன்றாவது பார்வை என்றால் “நெஞ்சினிலே” ஒரு பெண்ணின் பார்வை.
“அவன் மன்மதக்காட்டு சந்தனம் எடுத்து மார்பில் அப்பிக்கிட்டான்
இவ குரங்கு கழுத்தில் குட்டி போல தோளில் ஒட்டிக்கிட்டா
வெக்கத்தையே கொழச்சி கொழச்சி குங்குமம் பூச்சிக்கடி
இனி புத்தி கலங்குற முத்தம் குடு ராசாவே”

இந்த வரிகள் தான் “குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலயத்தான்” என்றிருந்தது.

அடுத்து,

“கட்டில் விட்டு காலையிலே
கசங்கி வந்தா சேலை மாத்துங்கடி”

இது தான், “கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்”

“சீரட்டொளியில  ஓரந்தெரிஞ்சுது உம்முகம்”“ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே”
உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச் சிரிப்புல மெல்லச் சிவந்தது எம்முகம்”“சிவந்ததே என் மஞ்சளே”

இது போக, இன்னும் சில வரிகள் கொஞ்சம் அதன் முன்னணிகளை யோசிக்க செய்தன.
“என் ரத்தம் சூடுகொள்ள
பத்து நிமிஷம் தான்
ராசாத்தி.
ஆணுக்கோ பத்துநிமிஷம்
பொண்ணுக்கோ அஞ்சுநிமிஷம்”

இந்த வரிகளுக்கு விளக்கமென்று எதுவும் தேவையில்லை.
ரத்தம் சூடுகொள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள காலத்தை நிர்ணயித்திருக்கும் வைரமுத்து தனது இன்னொரு பாடலில் ரத்தத்தின் அளவை எழுதியிருக்கிறார்.

“ஆணுக்குள் ஆறு லிட்டர் ரத்தம்
பெண்ணுக்குள் ஐந்தரை லிட்டர் ரத்தம்
ரத்தங்கள் குறைந்தாலும் உணர்ச்சி மட்டும் குறைவது இல்லை”

இந்த வரிகளில் பெண்ணுக்கு ரத்தத்தின் அளவு குறைந்தாலும் உணர்ச்சி குறையவில்லை என்று சொன்ன இவரே தான் 30 ஆண்டுகளுக்கு முன்னரே
“ஆணின் தவிப்பு அடங்கிவிடும் பெண்ணின் தவிப்பு அடங்காது” என்று இதற்கான குறிப்பெழுதி வைத்திருந்தார்.

இதன் நீட்சி தான் இந்த “சாரட்டு வண்டில” பாட்டிலும்

“சண்டித்தனம் பண்ணும்
ஆம்பளைய கிண்டி
கெழங்கெடுப்பா” என்ற வரிகளில் தெரிந்தது.

இன்னும் வேறு சிலவற்றிலும் காண நேர்ந்தது,
“மல்லு வேட்டி கட்டி வந்த
சல்லிக்கட்டு மாட்ட முட்டி
மல்லியப்பூ வெல்லப்போவுதடி நில்லு” – (யாரோ யாரோடி)

“சைவ முத்தம் கொடுத்தா ஒத்து போக மாட்டேன்
சாகசத்த காட்டு செத்து போக மாட்டேன்
கொஞ்ச நேரம் என்ன கொல்லய்யா” – (சண்டக்கோழி கோழி)
‘வான் வருவான்’ பாடலில் வந்த “கள்ள காமுகனே”, பின் “ரகசிய ஸ்நேகிதனே” எல்லாம் இந்த வைரமுத்துவே தான்

இளம்பரிதி கல்யாணகுமார்
01  March 2017
மஸ்கட்
Advertisements