காதலின் அழகு அதை உணர்வதிலும் உணர்த்துவதிலும் தான் இருக்கிறது. காதலின் வெளிப்பாடுகளுக்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன. ஒன்று மௌனத்தில் ஓசைகளின்றி வெளிப்படுத்தும் நிசப்தமொழி மற்றொன்று இசைப்பின்னணியில் வார்த்தைகளில் வெளிப்படுத்தும் மணிரத்னமொழி. பெரும்பாலான சமயங்களில் அந்த மணிரத்ன மொழியின் இசை ரஹ்மானென்றால் அதன் வார்த்தைகள் சுஜாதா. இசைக்கு மூலமான இசைக்குறிப்புகள் போல காதலுக்கு வேண்டிய குறிப்புகள் சுஜாதாவின் திரைமொழி.

வசப்பட்ட காதலைச் சொல்லுதல் – காதலின் உறுதியை மீளாக்கம் செய்வது

-“கல்யாணமாகிறதெல்லாம் சும்மா. society . ஊர்ல ஒத்துக்கணும் தான். நாம தான் societyக்காக  எதுமே செய்றதில்லயே. இத மட்டும் ஏன் செய்ணும்”
.
-“இப்ப என்ன தான் செய்ணும்ங்கிற”
 
-“சிம்பிளா சொல்றேன்
உன்ன காதலிக்கிறேன்.. நம்ம ரெண்டு பெரும் சேந்து வாழலான்னு.. என் வீட்ல வந்து இருன்னு..
மரமண்டைக்குப் புரிலயா.
என்கூட…, என்ன முழுசா சகிச்சிக்கிட்டு வாழ வர்றியானு கேக்குறேன்”
-“யோசிச்சு சொல்றேன்”.

வாழ்க்கையைத் தொடங்குவதற்கான மனதின் ஆசைகளை நேரடியாக வெளிப்படுத்த “உன்ன காதலிக்கிறேன்” என்று சொல்லும் கொஞ்சம் யதார்த்த நிலை இது.

——————————

வசப்பட்ட காதலை சூழ்நிலையறிந்து சொல்லுதல் – காதலின் உறுதியை ஒரு சார்பு நிலையில் எடுத்துக்கொள்வது

-“இந்திரா.
உனக்கு என்ன வயசாகுது”

-“பாத்தா எப்படி தெரியுதாம்”
 
-“18 தாண்டிடுச்சா”
 
-“தாண்டிடுச்சுன்னா”
 
-“என்ன கல்யாணம் கட்டிப்பியா..
அமுதா-க்கு அம்மாவா இருப்பியா .
யோசிச்சு சொல்லு”.
இதை மேம்போக்காக வெறும் காதலுக்குள் அடைத்துவிட முடியாது. தன்னை விரும்பும் பெண்ணென்று தெரிந்தும் இணைவதற்கான காரணங்களுக்காக காத்திருந்தது போல நேரடியாக “என்ன கல்யாணம் கட்டிப்பியா” என்று மைய நோக்கத்தை வெளிப்படுத்துவது.

—————

மேலே சொன்ன இரண்டையும் இணைத்துப்பார்த்தால் ஒன்றன் பதிலும் – மற்றொன்றின் கேள்வியின் முடிவும் ஒரே நிலையில் பொருந்தி நிற்கும்.
மைக்கேல் காதலைச் சொன்னதும் ‘ஆம்’ தான் பதிலென்று இருந்தாலும் கீதாவின் பதில் “யோசிச்சு சொல்றேன்”. பதிலின் தாக்கத்தை ஆண் உணர்ந்துகொள்ள பெண் செய்யும் குறும்புத்தனம்.

திருச்செல்வம் கேள்வியிலேயே “யோசிச்சு சொல்லு” என்று கேட்பது ஒருவித சுதந்திர மனநிலை. பொறுமையான புரிதலுக்கான அவகாசமும் கூட. நெருங்கிவந்த பொழுது விலகிச்சென்று இப்பொழுது விலகிச்செல்ல நேரும்போது விருப்பத்தை காட்டுவது. கண்ணியமான நகர்த்தல்.

——————-

காதலைப்  புதுப்பித்தல்
“அருமப்பட்டிக்காடே. englishல ஒன்னு சொன்னா புரியுமா”
“கொஞ்சம் கொஞ்சம் . என்னனு சொல்லுங்க”

“I Love You”
இதில் காதலுக்கான புதிய வெளிப்பாடும் இல்லை விண்ணப்பமும் இல்லை.
காரணங்கள் இல்லை எதிர்பார்ப்பு இல்லை.
வெறும் காதல் மட்டும் இருக்கிறது. உண்மையான காதலும் கூட.

அனைத்திலும் மணிரத்னத்தின் காதல்மொழி “சுஜாதா”

இளம்பரிதி கல்யாணகுமார்
27  February 2017
மஸ்கட்
Advertisements