சினிமாவின் மொழியிலக்கியத்தை Realism, Magical Realism என்று சொல்லி கேட்டதுண்டு. நிதர்சனத்தைப் பொறுத்தவரையில் சினிமா என்பது Surrealism, which is something beyond the reality. அதனால் தான் கற்பனைக்கு மீறிய நிகழ்வுகளை சித்தரிக்கும்போது அதன் சுயத்தன்மையை சினிமாத்தனம் என்று கடக்கச் சொல்வார்கள். ஒரு திரையில் அசைவுகளற்ற தொனிக்குள் இயல்படும் காட்சிகளும் குரல்களும் நமது வாழ்க்கையை சித்தரித்துவிடுகிறதென்றால் அது எத்தனை பெரிய ஆர்ச்சர்யம்.

“அட நம்ம வாழ்க்கை அப்டியே தெரியுதே”
“அட இப்டிலாம் நடந்தா எவ்ளோ நல்லா இருக்கும்”

இந்த இரண்டும் தான் சினிமா. ரசனையுள்ள கௌதம் மேனன் சினிமா.

நிதர்சன நிமிடங்களை நிச்சயம் கெளதம் மேனன் திரைப்படங்களில் உணர முடியும். காதலுக்கு மட்டுமல்ல உறவுகளுக்கும் அதன் பிடிப்புகளுக்கும் கூட பல referenceகளை தர வல்லது

அம்மா-அப்பா-தங்கை-காதலி-மனைவி என்று உறவுகளுக்கு ஒவ்வொரு பெயரை வைத்தாலும் அதன் மையப்புள்ளி அன்பு தான் என்பதை அதிகம் உணர்பவர்கள் வாழக்கையை ரசிக்கிறார்கள். அப்படியொரு ரசனையின் பரிசு கௌதமின் வாரணம் ஆயிரம்.

படத்தின் தொடக்கத்தில்  கௌதமின் குரலில் ஒலிக்கும் “உறவுகள் தொடர்கதை” பாடலில் வரும் “இனியெல்லாம் சுகமே” வரிகள் படம் முழுக்க வரும் சுகத்திற்கான ஒரு முன் அறிவிக்கை என்பது படத்தின் முடிவில் தான் தெரியும். தான் இயக்கும் படத்தில் தன்னை இயக்கிய அப்பாவின் பெயரையும் சேர்த்து கௌதம் வாசுதேவ மேனன் என்று உருமாறியிருந்த படம் இது.

படம் முழுவதும் அப்பா. அப்பாவின் வாழக்கை, அப்பாவின் காதல் என்று நகரும் ஒரு அழகிய  Photo Album. “என்ன தமிழ்ல english பேசியா படம் எடுக்கப்போற” என்று தன்னை பகடிசெய்து வசனம் எழுதிக்கொள்ளும் கெளதம் இந்த படம் முழுவதும் அப்பாவை daddy என்று தான் அதிகம் செதுக்கியிருப்பார். உரையாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு குறுங்கவிதை.
ஒவ்வொருவருக்கும் முதல் hero அப்பா தான். வாழ்க்கை மீதான ரசனையும் சரி எதிர்பார்ப்பும் சரி அது அப்பாவிடமிருந்து தான் தொடங்குகிறது.
கிருஷ்ணன் மரணத்தின் இறுதி நொடியில் சரிந்துவிழும்போது அவரது மகள் அந்த வலியையும் மீறி புன்னகையோடு “அம்மா. He is smiling” என்று மாலினியிடம் சொல்வாள். எந்நிலையிலும் மகிழ்ந்திருக்கவும் ரசித்திருக்கவும் அப்பா தான் சொல்லித்தருகிறார்.
இதையே தான் இறுதிக்காட்சியில் மாலினி சூர்யாவிடம்
“இனி உங்க குழந்தைங்களுக்காக வாழணும். Daddy எப்பவும் சொல்வார்ல Whatever happens life has to go on “ என்று ஒரு அம்மாவாக கூட்டிச்செல்வார்.

குழந்தை சூர்யா பிறந்ததும்  கிருஷ்ணன் தனது கைகளிலேந்தி “Heyyy. He is good looking” என்று சொன்ன அடுத்த நொடி “உன்ன மாதிரியே.. அப்டியே” என்று மாலினி கொடுக்கும்  பதிலில் அவர்களது காதல் சொல்லப்பட்டிருக்கும்.

சூர்யாவை கையில் தாங்கிக்கொண்டு கிருஷ்ணன்,

“கைல பத்து காசு இல்ல. ஆனா உலகத்துலயே சந்தோஷமான மனுஷன் நான்.
வாழ்க்கையில இவனுக்குன்னு என்ன எழுதிருக்குன்னு தெரில அப்படி எதும் தப்பா எழுதிருந்தா நான் அத திருத்தி எழுதுவேன்.
Anything for you…. And now anything for him” என்று பேசி முடிக்க முடிக்க மாலினியின் கண்கள் கிருஷ்ணனை மட்டும் தான் பார்த்துக்கொண்டிருக்கும்.
ஒரு நல்ல கணவனாக இருந்தவர் நல்ல அப்பாவாக மாறுவதை பார்க்கும் மகிழ்நிலை அது.

லாரியில் “Its easy. Just like driving a car. I am your good dad. And Don’t tell Amma.. okay” என்று கிருஷ்ணன் சொல்லும்போதும் சூர்யாவின் பார்வை முழுக்க ஆர்ச்சர்யம் தான். பின்னணியில் “நீங்க தான் என்னோட ஹீரோ Daddy” என்ற வசனம் ஒலிப்பது அதற்கான அருஞ்சொற்பொருள்.

அப்பா சொல்வதையெல்லாம் கேட்கும் மகனாக தான் சூர்யாவின் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

“லோக்கலா தெருவுல நின்னு பொண்ணுங்களோட பேசுறத பாத்தேன்.
அது வேணாம். உன் வீடு சின்னதா இருந்தாலும் அழகா இருக்கு.
அவங்க எல்லாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பேசு. I have no problem”

அடுத்தநாள் தோழிகளுடன் சூர்யா வீட்டில் அமர்ந்து பேசுவது போல காட்சி வரும்.

“கஷ்டப்பட்டு Work out பண்ணி இதெல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்க” என்று ஒரு ஹீரோவாக அப்பா சொன்ன தைரியம் தான் ஆர்த்திக்காக  சண்டையிடவும், கல்லூரியில் ragging செய்யும் சீனியர்களுடன் மோதவும்  செய்யும்.

Cricket கற்றுக்கொடுக்கும்போது “இப்டி பிடிச்சா out-swinger”  என்று சொல்வதைக் கற்று கல்லூரியில் out-swingerல் wicket எடுப்பார் சூர்யா.

அப்பா சொல்லி சூர்யா மீறும் விஷயங்கள் இரண்டு.

ஒன்று புகைப்பழக்கம்.
கிருஷ்ணன் : “Heyy Kiddo.. நீ smoke பண்றதில்லல. I don’t want you to smoke”
சூர்யா : “பண்ணதில்ல Dad தொட்டது கூட இல்ல”

கிருஷ்ணன் : Good

பதின்ம வயது மகனிடம் ஒரு அப்பா சொல்லும் அறிவுரை இது.

ரயிலில் மேக்னா  “கிடச்சுதா நீ கேட்ட Oxygen. தம்மு தானே” என்று கேட்டதும் “ச்ச. ச்ச..  I don’t smoke” என்று பெருமையாக சொல்லும் சூர்யா அதே  மேக்னாவின் இறப்பின் சோகத்தால் போதைக்கு அடிமையாவான். மீண்டு வருவதற்காக அவனது அப்பா-அம்மா அவனை சிறிது காலம் வெளியில் அனுப்புவார்கள். காஷ்மீரில் நினைவுகளின் வலி தாங்காமல் புகையை பற்றவைத்து பின்னர் அப்பாவின் ஞாபகத்தில் தூக்கி கீழே வீசுவான் சூர்யா. அப்பொழுது அப்பாவின் சொல்ல மீறாது திரும்புவான்.

மற்றொன்று அப்பாவின் கையை விட்டது.

 

பீச்சில் தொலைந்து போகும் சூர்யாவிடம் “Heyy Kiddo. அப்பா கைய என்னைக்குமே விடக்கூடாது” என சொல்வார் கிருஷ்ணன்.

அதற்கு எதிர்வினையாக கிருஷ்ணன் இறந்த செய்தி கேட்டு வீடு திரும்பும் சூர்யா நினைவுகளில் கூறும் வசனம் இது.

“அந்த surgeryக்கு அப்றம் உங்க குரல் போச்சு. உங்க கழுத்த இறுக்கிக் கட்டிபோட்ட மாதிரி.என்னால அப்டி உங்கள பாக்கவே முடில Daddy. உங்ககிட்ட இருந்து விலகியே இருந்தேன்.
அது தப்பு தான். உங்க கூடயே இருந்திருக்கணும்.
உங்க கைய பிடிச்சிட்டு உங்க கூடயே உக்காந்திருக்கணும்

I am Sorry daddy”

ஆனால் இந்த மன்னிப்பினை கேட்க கிருஷ்ணன் இருக்க மாட்டார். அவரது மரணம் தான் மிஞ்சியிருக்கும்.

அப்பா -அம்மா – காதல்
காவியக் காதலர்களையும் சினிமாவின் காதலர்களையும் கொண்டாடும் யாருக்கும் வீட்டில் இயல்பாய் சுற்றித்திரியும் அப்பா அம்மாவினுடைய காதல் கண்ணுக்கு தெரிவதில்லை.
சூர்யாவின் காதலுக்கு ஆதியும், அடித்தளமும் கிருஷ்ணன்-மாலினியின் காதல் தான்.
மாலினி : Do you believe in Destiny, Surya ?
சூர்யா – தெரில மா ஏன்?
மாலினி : Daddy ஊர் ஒத்தப்பாலம் நான் மதுரை. Madras christian college சந்திச்சோம்
Destiny,
என்ன விரட்டி விரட்டி லவ் பண்ணார். We fell in love.
Still in love.
அந்த காதல்னால தான் வாழ்க்கையும் அரம்பிச்சுது
அந்த காதல்னால தான் நீ,ஸ்ரேயா.. எல்லாமே…
LOVE.. 
எந்தவொரு வாழ்க்கையும் காதலில் தான் தொடங்குகிறது, காதலற்ற வாழ்க்கை இசையற்ற மொழி போன்றது.

“முதல் தடவ பாத்தப்ப அவர் மேல இருந்த கோபமெல்லாம் போய்டுச்சு. என்ன handsomeஆ இருப்பார் தெரியுமா உங்க அப்பா. இப்பவும் அப்டி தான். He just swept me off my feet. ஒரு second ல” –  இது தான் மாலினி தனது கிருஷ்ணனின் முதல் பார்வையை சொல்லும் காட்சி.

இதையே கிருஷ்ணன் மாலினியிடம் காதலைச் சொல்லும்போது “இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு அழக பாத்திருக்க மாட்டாங்க. And I am in love with you” என்று வரும்.

மேல்சொன்ன இரண்டு நிகழ்வுகளும் தான் சூர்யாவின் மேக்னா மீதான காதலையும் நிர்ணயித்தது.

“காதல்னா என்னனு தெரிஞ்சது. அம்மாவ முதல்-ல பாத்தப்ப உங்களுக்கு எப்டி இருந்துச்சும் தெரிஞ்சது” – ரயிலில் மேகனாவைக் காணும் சூர்யா  காதலை உணரும் தருணத்தில் நினைத்துக்கொள்வது அப்பா அம்மா காதலைத்தான்.

 “I fall in love with you, Meghna. கேவலமா நினைக்காத உண்மையிலேயே. உன்ன பாத்தவுடனேயே bounding heart beat.. இளையராஜா background score. வெள்ள டிரஸ் போட்ட பொண்ணுங்க.. எங்க அப்பாக்கு எங்க அம்மா பாத்த உடனே ஆன மாதிரி.. எல்லாம் ஒரே secondல. I am in love with you meghna”

என்று காதலை வெளிப்படுத்தவும் அப்பா அம்மாவுடைய காதல் துணைக்கு தேவைப்பட்டது.

காதலை ஏற்க மறுக்கும் மேக்னாவிடம் “எங்க இருந்தாலும் தேடி வருவேன். I will come in to your life. I will sweep off your feet” என்று அம்மா சொன்னதை தான் சூர்யா proposalக்கு பயன்படுத்துவான்.

 “என்னோடு வா வீடு வரைக்கும்.. என் வீட்டை பார் என்னை பிடிக்கும்..” என்று சூர்யா பாடியதும் கூட அவனது அப்பா-அம்மா காதலின் மீதான நம்பிக்கையில் தான். இங்கு வீடு என்று பாடப்பட்டது வெறும் வீடல்ல. அது தான் காதல்.
இது தான் கௌதம் மேனன்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் “படம் பா. I want to become Filmmaker பா” என்ற வசனம் வரும்.

கெளதம் மேனன் ஒரு சாதாரண இயக்குனர் அல்ல. He is a film-maker who can showcase one’s inner mind. அழகியல் சார்ந்த படைப்பாளி.

 

தனது அனைத்துப் படங்களிலும் ஏதேனும் ஒரு இடத்தில் தனது முகத்தைக்காட்டும் கெளதம் இந்த படத்தில் முகத்தை மூடிக்கொண்டு வெறும் கண்கள் மட்டும் தெரியும்படி உளவாளியாக ஒரு காட்சியில் வருவார். கதை சொல்லும் கண்கள் அவை. நடிக்காதிருக்குமா என்ன.
மணிரத்னத்திற்கு பிறகு அழகைக் காட்டும் கண்கள் கௌதம் மேனனுக்கு தான்.
இன்னும் நிறைய அழகியலை உங்களது கண்கள் வழி காட்சிப்படுத்துங்கள் கௌதம்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

இளம்பரிதி கல்யாணகுமார்
25  February 2017
மஸ்கட்