‘வான்’ என்ற இந்த இரண்டெழுத்து சொல் ‘காற்று வெளியிடை’ படத்தின் முதல் முன்னோட்டத்தின் மொத்த காட்சிகளிலும் ஆக்கிரமித்திருந்தது. வைரமுத்துவும் மணிரத்னமும் இணைந்தால் வானமும் வசப்படும் என்பதை உணர்த்த பரந்த ஆகாயத்தை இரண்டெழுத்தில் அடக்கி ‘வான்’ என்று எழுதியிருக்கிறார்கள். பாடல் வரிகள் முழுவதும் வான்மயம்.

வான்
வருவான்
தொடுவான்
மழைபோல் விழுவான்
மர்மம் அறிவான்

இந்த வரிகளைப் படித்த மறுநொடி இந்த பாடலை மறந்து ‘ராவணன்’ படத்தில் வரும் “நான் வருவேன்” பாடலின் வரிகளும் மெட்டும் ஆட்கொண்டது.

அது.

நான் வருவேன்
மீண்டும் வருவேன்
உன்னை நான் தொடர்வேன்
உயிரால் தொடுவேன்

இந்த இரண்டு பாடல்களும் ஒரே உணர்வை தரக்கூடியதாக இருந்தது. இரண்டுக்குமான ஓசை ஒரே சீரான அளவீட்டில் இருப்பது கூட காரணமாக இருக்கலாம்.

“நான் வருவேன்” நம்பிக்கையின் வெளிப்பாடு;
“வான் வருவான்” எதிர்பார்ப்பின் எழுச்சி.

ராவணன் படத்தை விமர்சனங்கள் ராமாயணத்தின் கண்ணோட்டத்தில் அணுகின.
கதாபாத்திரங்களும் அப்படியே பொருத்திப் பார்க்கப்பட்டன.அப்படி ஏதும் செய்யாமல் அதை ஒரு சாதாரண கதையாக பார்த்தால் ஒரு கட்டுப்பாடான தூய்மையான காதல் தெரிந்திருக்கக் கூடும். (அனைவருக்கும் அல்ல)

‘வீரா’ என்னும் ஒரு ஆண் ‘ராகினி’ என்னும் ஒரு பெண்ணை 14 நாட்கள் கடத்தி வைத்திருக்கிறான். அவன் அந்த பெண்ணின் மீதான ஒரு பெயர் தெரியாத ஈர்ப்பில் அதன் நோக்கம் காமம் இல்லையென்ற ஒரு பார்வையில் அவளுடன் பயணிக்கிறான்.
அதை தான் வைரமுத்து முதல் சந்திப்பில் “உசுரே போகுதே உசுரே போகுதே” என்று தொடங்கியிருப்பார்.

பாடலின் மொத்தமும் ஒரு confessional approach ரீதியிலேயே பயணித்திருக்கும். வரிகளும், விளக்கங்களும் அதற்கான நிலைப்பாடுகளுமென அந்த உறவுக்கான மொத்த முகத்தையும் வரி வரியாய் எழுதியிருப்பார் வைரமுத்து. காதலும் அது சம்பந்தப்பட்ட உணர்வுகளும் மட்டுமே மேலோங்கியிருக்கும்.

“அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி”,

“என் மயக்கத்த தீத்து வெச்சு மன்னிச்சிருமா”,

“ஒடம்பும் மனசும் தூரம் தூரம், ஒட்ட நினைக்கேன் ஆகல

மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய ஒடம்பு கேக்கல”

என அனைத்து வரிகளுமே ஆழ்மன பிதற்றல்களே தவிர ஒரு ஆணின் அத்துமீறலாக அமையவில்லை.

“இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
விதி சொல்லி வழி போட்டான் மனசபுள்ள
விதிவிலக்கில்லாத விதியுமில்ல”

என்ற வரிகளில் விதியைப் பற்றியும் விதிவிலக்கைப்பற்றியும் என்று எழுதி ஒரு ஆணின் மனப்பிறழ்வுகளுக்கு நியாயம் செய்திருப்பார்.

14வது நாளில் கணவனைக் காப்பற்ற ராகினியின் போராட்டத்தின்போது துப்பாக்கியுடன் அவளிடம் வீரா சொல்லும் தன்னிலை விளக்கம் இது.

(வசனம் – சுஹாசினி)

“சுடுங்க. இங்கன (நெஞ்சில் துப்பாக்கி வைத்து) சுட்டா பத்தே நிமிஷம் தான்.மனசுல இருக்க கண்றாவி, சஞ்சலம், வேதனை, கூடவே உசுரும் போயிரும். ஆனா இங்கன ((தலையில் துப்பாக்கி வைத்து) சுட்டா ஒரே நொடி. நெனப்பு, பிரியம், ஆசை, மூச்சு எல்லாம் ஒன்னா போயிரும். வலிக்காது. உங்கள இப்டியே சந்தோஷமா பாத்துகிட்டே சிரிச்சுகிட்டே சரிஞ்சிருவேன்.

இதிலுள்ள புரிதலை சற்றுபார்த்தால் அவனுக்கு அவள் மீதான அன்பும் காதலும் புத்திக்கு எட்டிய ஒன்று என்பதை அவனே ஒத்துக்கொண்டிருப்பான்.

“கூடவே இருந்தா என் புருஷனை விட்ருவியா” என்று ராகினி கேட்டதும் புத்தி மனது இரண்டும் யோசிக்க அவளது கண்ணைக்கட்டி கணவனிடமே  அனுப்பி விடுவான் வீரா.

ஆனால் கணவனது சூழ்ச்சி திட்டம் தெரியாமல் கணவனின் சந்தேகத்திற்கு விடை தேட மீண்டும் வீராவிடம் வருகிறாள் ராகினி.ரஹ்மானின் உதவியோடு தொடங்கும் காட்சி இது.

“கண்ணக்கட்டி போங்கன்னு அனுப்பி வச்சப்ப கூட வருத்தபட்லயே,

திரும்பி வந்தோன மட்டும் ஏன் இம்புட்டு சந்தோசமா இருக்கு”

என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி

“அழாதிய, முழுங்குங்க, முழுங்குங்க” என்று தேற்றுவான்.

ஒரு சிறு கீறலில் சிணுங்கும் குழந்தையின் பேரிரைச்சல் அணைவது போல ராகினி வீராவின் மேனரிஸத்தில் “பக்..பக்.. பக்..” என்று சிரித்துக்கொண்டே அவளுக்கான உணர்வுகளை கண்ணீரோடு காட்டுவாள். கண்ணீரில் தெரியும் அந்த மகிழ்ச்சி புனிதமானது.

உதட்டையும் கண்களையும் நேர்கோட்டில் வைத்து கண்ணீரில் வீரா சொல்லும் வசனம் – “உசுரு வந்துருச்சு,உசுரு வந்துருச்சு,மனசு வந்துருச்சு”

முதல் நாள் “உசுரே போகுதே” என்று சொன்ன அதே வீரா இறுதி நாளில் “உசுரு வந்துருச்சு” என்று முடித்திருப்பான். இது வைரமுத்து அங்கு சொன்ன விடுகதையின் விடையை மணிரத்னம் இங்கு சொல்லியிருப்பார்.இது தான் கதை. காதல். ராமாயணமோ மஹாபாரதமோ எதுவுமில்லை. ஒரு சுழற்சியை ஒரு பூரணம் என்று கூட சொல்ல முடியும்.

“உசுரே போகுதே” – “உசுரு வந்துருச்சு”

இந்த இரண்டுக்குமான இடைவெளியை, காரணத்தை வாழ்வின் அர்த்தமாக சொல்வது வைரமுத்துவின் அழகு

“அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுதே
வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுதே”

“உசுரு வந்துருச்சு” என்ற சொன்ன நாளில் தான் அவனது உயிரும் பிரியும். அந்த மலை உச்சியிலிருந்து பள்ளத்தில் குண்டடிப்பட்டு உயிர் பிரிய பிரிய காற்றில் விழும் வீரா, முகம் முழுக்க வீராவின் ரத்தத்தோடு கை நீட்டும் ராகினி என அந்த காட்சியில் புரியும் மொத்த அர்த்தங்களும்.

“ஒரு கனவு காற்றில் மிதக்குதோ
அது மிதந்து கொண்டு சிரிக்குதோ”

அவர்களது கனவு காற்றில் மிதப்பது போல வீரா புன்னகையோடு மிதந்து கொண்டே ‘மீண்டும் வருவேன்’ என்று கையசைத்து செல்வான்.

வான் – மீண்டும் வருவான்


இளம்பரிதி கல்யாணகுமார்
08 February 2017
மஸ்கட்
Advertisements