கண்ணதாசன், வாலி தொடங்கி வைரமுத்து என பெரும்பாலான தலைத் தமிழிசை கவிஞர்கள் அனைவரும் தங்களது பாடல்களில் சங்க இலக்கியத்தின் தாக்கத்தினை மொழிக்காதலின் தழுவலாக தழுவிக்கொண்டு நம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். வைரமுத்துவின் ‘நறுமுகையே’, வாலியின் ‘முன்பே வா’ என ஆங்காங்கே பல மேற்கோள்களை அடிக்கோடிட்டு அப்படிப்பட்ட தழுவல்களாக எத்தனையோ உதாரணங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம்..

ஆதிகால சங்கத்தமிழை தழுவி எழுதும் கூற்றுக்கு ஈடானது தான் வெளிமொழி இலக்கியங்களின் தாக்கத்தில் நம்மை ஆட்படுத்திக்கொண்டு தமிழில் எழுதுவதும். இப்படிப்பட்ட நிகழ்வுகளை plagiarism, inspiration என்ற இரண்டு வார்த்தைகளுக்குள் ஒரு enter பட்டனில் அடக்கிவிடுகிறது அறிவார்ந்த review சமூகம்.

வேற்றுமொழித் தழுவல்களை கொண்டு தான் படமெடுக்கிறார் என்பது கமல்ஹாசனின் முன் வைக்கப்படும் பிரதானமான குற்றச்சாட்டு. அதற்கு அவர் சொல்லும் பதிலும் அவரது முயற்சிகளின் பாணியில் புதுமையாக இருக்கும். பரீட்சையில் காப்பியடித்து மாட்டிக்கொண்ட மாணவன், பிட் வைத்து எழுதிக்கொண்டிருக்கும் மாணவனை நைஸாக இழுத்துவிடுவது போல ராமாயணத்தைச்சொல்லி கம்பனை இழுத்துவிட்டு தப்பித்துக்கொள்வார்.

இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஒரு கவிஞனின் கலைஞனின் அடர்வை எந்த வகையிலும் கலைத்துவிடப்போவதில்லை. மாறாக அப்படிப்ப inspirationஐ மறைக்க முற்படும்போது தான் அவை குற்றமாக பார்க்கப்பட்டு அவர்கள் மீதான நம்பகத்தன்மை குறையத் தொடங்குகிறது.

வேற்று மொழிகளிலும் இருக்கும் பெரும்பான்மையான கவிதைகளை மொழிபெயர்ப்பு என்று ஒரு பகுதியில் சேர்க்காமல் அதன் உட்கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கவிதை செய்தால் நம்மொழியின் சாயலில் மிளிர்ந்து நிற்கும் என்பதில் நம்மொழியின் மீதான கர்வத்தில் அடித்து சொல்லாலாம்.

இப்படியாகப்பட்ட இருவேறு மொழிகளின் ஒற்றை புரிதலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அது தான் இது
————-
சமீபத்திய பிரபல்யமான பாடலான ‘தள்ளிப்போகாதே’ பாடலில் துள்ளலான குரல், பிரம்மாண்டமான இசை என நுட்பங்களைத் தாண்டி தாமரையின் தமிழ் வரிகள் வெகுவாக ஈர்ப்பட்டது, ரசிக்கப்பட்டது. அதன் காரணமாக இருப்பது வார்த்தைகளும் அதன் வரி அமைப்பும் தான். வீரியம் குறையாத, ஏக்கங்கள் குழைந்த ஒரு காதல் குழந்தையின் அழுகைக்குரலென அத்தனை அழகாக ஒலிக்கக்கூடிய பாடல் அது.

அதிலுள்ள ஒரு சரணத்தில் தாமரை இப்படி எழுதியிருக்கிறார்.

“எனது கடல் போல பெரிதாக நீ நின்றாய்
சிறுவன் நான்
சிறு அலை மட்டும் தான்
பார்க்கிறேன் பார்க்கிறேன்”

நான் மிகவும் ப்ரம்மித்து ரசித்த வரிகள் இவை. எனது நீண்ட நாள் whatsapp statusம் இவை தான்.
எத்தனை பெரிதாக கடல் கிடந்தாலும் சிறுவனின் கண்கள் அலைகளை நோக்குவது போல அத்தனை அழகான பெண் இருந்தாலும் அலையோடு மட்டுமே அவன் பார்வை கொண்டிருக்கிறான்.
காதலை வெளிப்படுத்துவது கடலில் விழுவது போலானால் அதற்கான ஆமோதிப்பு நீந்தி கரைசேருதல் போலவும் – நிராகரிப்பு மூழுகிச் சாதல் போலவும் உருவகம் செய்து கொள்ளலாம்.
இது ஒருபுறம் இருக்கட்டும்.

ஆங்கிலத்தில் Christopher Poindexter என்னும் கவிஞரொருவர் தனது பக்கத்தில் எழுதியிருந்த சில வரிகளை எனது தங்கை எனக்கு அனுப்பி வைத்திருந்தாள்.
(நான் தமிழே படிச்சதில்ல, ஆங்கில இலக்கியம் படிக்க யுகங்கள் ஆகலாம்)

அதில், Chirstopher பின்வருமாறு ஒரு காதல் கவிதையினை எழுதியிருக்கிறார்.

“I admit,
I was afraid
to love.
Not just love,
but to love her.
For she was a stunning
mystery. She carried things
deep inside her that no one
has yet to understand,
and I,
I was afraid to fail,
like the others.

She was the ocean
and I was just a boy
who loved the waves
but was completely
terrified to
swim.”

இதை எழுதிய ஆண்டு எதுவென்று சரியாக தெரியவில்லை. ஆனால் இந்த காதல்மொழிகள் 2013ம் முதல் இணையத்தில் உலவிக்கொண்டு வருவதைக்கொண்டு பார்க்கையில் இது இந்த தள்ளிபோகாதே காலத்துக்கு முன் எழுதியிருக்கக்கூடும் என்று எடுத்துக்கொள்ளலாம்.
இரண்டு கவிஞர்களும் பெண்ணை கடலாக்கி ஆணை சிறுவனாக்கி அலையை பார்க்க வைத்திருக்கின்றனர். எது எப்படியோ காதலுக்கு மொழி என்பது தெரியாது கவிஞன் யாரென தெரியாது; அது போல பெருங்கடலை அடைந்த சிறுவன் பயத்தில்
வங்கக்கடலிலும் அலையைத்தான் பார்க்கிறான்,
பசிபிக்கிலும் அலையைத்தான் பார்க்கிறான்.

தாமரை எழுதிய சிறுவனும் christopher எழுதிய சிறுவனும் ஒரே சிறுவனாக இருந்தாலும் நானுமொரு சிறுவனாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் எனக்கான கடலையும் அதற்கான அலையையும் எங்கோ ஒரு தீவினுள் காத்திருந்த tom hanks போல

https://www.instagram.com/christopherpoindexter/
இது இந்த ரசனைக்காரனின் Instagram பக்கம்.

காதலை ரசிப்பவர்கள், காதலைக் கொண்டாடுபவர்கள், காதலை உற்றுநோக்குபவர்கள் (சதா காதலிப்பவர்கள் சற்று தள்ளியிருங்கள்) இந்த பக்கத்தினுள் சென்றால் பேரானந்தத்தின் பெருநதியில் நீராடலாம்.

(PS: படத்தில் இருக்கும் கையெழுத்து என்னுடையதல்ல)


இளம்பரிதி கல்யாணகுமார்
01 December 2016
மஸ்கட்
Advertisements