கபாலி பாடல்கள் வெளியான சமயதில் அது வரையிலான சந்தோஷ் நாராயணனின் பாடல்களைக் குறிப்பிட்டு அவரின் இசை வளர்ச்சியைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் வந்த பின்னூட்டங்கள் அனைத்தும் அவரின் கன்சிஸ்டென்சியை கேள்வி கேட்பது போல அமைந்திருந்ததன. அதற்கு பதில் சொல்வது போல இந்த ஆண்டின் கபாலி, இறுதிச்சுற்று தவிர மற்ற அனைத்து ஆல்பங்களிலும் ஒன்றிரண்டு பாடல்கள் தான் அவரது நிலத்தில் விளைந்திருந்தன.

சமீப காலங்களில் ஒரே இசையமைப்பாளருக்கு தீபாவளியன்று இரண்டு திரைப்படங்கள் வெளி வந்தது சந்தோஷுக்காக தான் இருக்குமென்று நினைக்கிறேன். இந்த தீபாவளிக்கு வந்த கொடியும் சரி காஷ்மோராவும் சரி சந்தோஷின் வழக்கமான பாணியிலிருந்து விலகியே தெரிந்தன. சுழலி, சிறுக்கி வாசம் மட்டுமே கொஞ்சம் ஆறுதலாக இருந்தன.

இதன் தாக்கமாக பைரவா பாடல்கள் வெளியான அன்று கூட வழக்கமான ச.நா. பாடல்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு என்னுள் குறைந்தே இருந்தது. இன்று தான் பாடல்கள் கேட்க நேர்ந்தது. எந்த பாடலும் பொருந்தாமல் ஒதுங்கி ஒதுங்கியே செல்கிறது.

கொஞ்சம் ஆறுதலாக “நில்லாயோ” பாடல் மட்டும் இன்னும் நின்று கொண்டிருக்கிறது.

https://www.youtube.com/watch?v=WMnLR2tADOI

வைரமுத்து ஒரு முக்கிய காரணம். கவிஞர் இங்கும் வரிகளில் தனது கவிராஜாங்கத்தை நிகழ்த்திக்கொள்கிறார்.

“மஞ்சள் மேகம் ஒரு மஞ்சள் மேகம்
சிறு பெண்ணாக முன்னே போகும்”

“மஞ்சள் வானம் தென்றல் சாட்சி”, “மஞ்சள் வெயில் மாலையிலே” என்று நிறத்தில் மஞ்சளுக்கு என்று தனி அழகு.
கவிஞர் தொடங்கும் “மஞ்சள் மேகம்” கூட அதே அலைவரிசையில் அழகின் நிறத்தையோ, மஞ்சள் பூசிய முக அழகையோ தான் சொல்ல வேண்டும்.

மேகமானது நிற்காமல் மிதந்து செல்வது போல செல்லும் அழகு பெண்ணை “நில்லாயோ” என்று பாடி நிறுத்தும் கவிஞரின் வரிகள் ஒரு தேடலின் பயணம்.

“நில்லாயோ நில்லாயோ உன் பேர் என்ன
உன்னாலே மறந்தேனே என் பேர் என்ன”

“ஏய் மாண்புறு மங்கையே, நில்லாயோ” என்று முன்பொரு முறை செம்மாதுளை வாய்மொழி காண அழைத்த கவிஞர் இம்முறை “நில்லாயோ” சொல்லி சிறுவாய் மலரே என்று அழைக்கிறார்.
வெள்ளை மழை பெய்ய வைத்தவர் இங்கு வெள்ளை நதியை நடக்க வைத்திருக்கிறார்.

“சிலிக்கான் சிலையோ சிறுவாய் மலரோ
வெள்ளை நதியோ வெளியூர் நிலவோ”

கடல் எப்பொழுதும் ஆர்ச்சர்யம். பொங்கினாலும் ஆர்ச்சர்யம் உள்வாங்கிக்கொண்டாலும் ஆர்ச்சர்யம். அந்த ஆர்ச்சர்யத்தின் வெளிப்பாடு தான் மூன்று கடல் சங்கமிக்கும் தென்னாட்டில் நான்காம் கடலாக ஒரு பெண்ணை பாட செய்திருக்கிறது.

“கம்பன் கவிதை மகளா
இவள் தென்னாட்டு நான்காம் கடலா”

அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்று எந்த விஜய்யை வைத்து பாடச்செய்து அழகென்பது பெண்பால் என்றாரோ அதே விஜய்யை கொண்டு வெயிலையும் பெண்பாலில் அடக்கி “பெண்பால் வெயிலோ” என்றும் எழுதியிருக்கிறார்.

இந்த பாடலில் மிகவும் ரசித்தது அவர் பயன்படுத்திய “கடவுளின் துகளோ” என்ற விஞ்ஞான விளையாட்டு தான். 2013ம் ஆண்டுக்கான நோபல் பரிசை பெற்றுத்தந்த கண்டுபிடிப்பு தான் ஹிக்ஸ் போசான் (Higgs Boson) என்னும் நிறையுடைய ஓர் அணுத் துகள்.
கடவுள் என்பது அரிதிலும் கிடைக்காத ஒரு ஜீவன். கடவுளுக்கான தேடலும் நீண்ட நெடியதொரு பயணம். அப்படி எளிதில் கண்டுபிடிக்க முடியாமல் இருந்த இந்த அணுத்துகளை “god damn particle” என்று பெயரிட்டு ‘கிடைக்காத ஒரு துகளுக்கு இவ்வளவு செலவும் நேரமும் வீணாகிறதே’ என்ற விரக்தியில் விஞ்ஞானி லேடர்மேன் என்பவர் ஒரு இருபதாண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்தார். அந்த “god damn particle” தான் பின்னாளில் சுருக்கப்பட்டு “god particle” ஆனது. அது தான் தமிழில் கடவுளின் துகள்.

அப்படி எளிதில் எவருக்கும் கிடைத்துவிடாத இத்தனை அழகு நிறைந்த பெண்ணை கடவுளின் துகள் என்று ஒப்பிடுவது இவர் இன்னும் அப்படியே தான் இருக்கிறார் என்றே காட்டுகிறது.

“யாரிந்த முயல் குட்டி” , “வெரசா போகையிலே” பாடல்களில் இருந்த மனநிலை இந்த பாடல் கேட்கும்போது எனக்கு மட்டும் தான் இருந்ததா என்று தெரியவில்லை.

பாடலை கேட்டு முடித்ததும் சந்தோஷ் நாராயணன் மீண்டும் “மோகத்திரை”, ஆசை ஒரு புல்வெளி” போன்று பழைய ச.நா வாக இருக்க வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது.

ப்ளீஸ் சார். உங்களுக்கான இடம் அது தான். ஒருவேளை ஹீரோக்களுக்கான படம் என்பதற்காக உங்களுக்கு நீங்களே அதிகம் சிரமம் கொடுத்து இப்படி நடந்துவிடுகிறதா என்றும் கூட புரியவில்லை.


இளம்பரிதி கல்யாணகுமார்
27 December 2016
மஸ்கட்
Advertisements