வைரமுத்துவின் இன்னுமொரு பொருளடக்கம்

மனதுக்கு நெருக்கமான சில பாடல்களை அளவுக்கு அதிகமாக கேட்டுவிட்டதாக தோன்றிய பின்னர் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு சில நாட்கள் கழித்து மீண்டும் கேட்கும்போது ‘அட’ என்ற ஒரு புதுவித அனுபவத்தைக் கொடுக்கும். பல நாட்கள் பழகியிருந்தய தோழியொருத்தி மணமுடித்துச்சென்றபின் வருடங்கள் கழிந்து ஒருநாள் தெருவிலோ ஏதேனும் கோவில் திருவிழாவிலோஅவளைக் காணும்போது பழைய ஞாபகங்களை மீட்டெடுக்கும் நிமிடங்கள் போன்றது இந்த அனுபவம்.

இன்று யதார்த்தமாக கடந்து செல்லும்பொழுது “சௌக்கியமா கண்ணே சௌக்கியமா” பாடலின் வரிகள் பார்வைக்கு யதார்த்தமாகவே கிடைத்தன. இந்த பாடல் அதே அனுபத்தை மீண்டும் கொடுத்து இன்றைய நாளை இசையாக்கியது.

https://www.youtube.com/watch?v=Lt2O2KVV-6M

ரஹ்மான், வைரமுத்து, தேசிய விருது, சங்கமம் என்று எத்தனையோ ஹாஷ்டாக்-கள் இந்த பாட்டுக்கு இருந்தாலும் இதன் மையமாக தோன்றுவது நித்யஸ்ரீயின் குரல். இவரது குரலைக் கேட்பதென்பது தண்ணீரின் குரலை கேட்பதற்குச் சமம். நீரானது ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு குரலில் பேசும் ஆனால் அதன் நிலை எப்பொழுதும் அதன் இயல்தன்மையான மௌனத்தின் குரலில் மட்டுமே இருக்கும்.

நித்யஸ்ரீயும் மழையாக “சௌக்கியமா கண்ணே சௌக்கியமா” பாடினால் பெருநதியாக “ஒருநதி ஒரு பௌர்ணமி” பாடுவார்.
கடலாக “கண்ணின்மணி கண்ணின்மணி” பாடினால் அருவியாக “கும்பகோணம் சந்தையிலே” பாடுவார்’

சரி. நான் சொல்ல வந்தது இந்த “சௌக்கியமா கண்ணே சௌக்கியமா” பாடலில் வரும் சில வரிகளை பற்றி தான்.

“அன்புநாதனே!

அணிந்த மோதிரம் வளையலாகவே துரும்பென இளைத்தேன்;

அந்த மோதிரம் ஒட்டியானமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்;”

ஒரு மேம்போக்கான மனநிலையில் இந்த வரிகளைப் படித்த உடனே இதிலுள்ள சொற்கள் ஒவ்வொன்றும் மற்றொன்றோடு முரண்பட்டு நிற்பது போல தோன்றும்.

அளவில் மோதிரம் சிறியதாகவும் வளையல் அதை விட பெரியதாகவும், ஒட்டியாணம் மற்ற இரண்டை விடவும் பெரியதாகவும் இருக்கும். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் மோதிரம், வளையல், ஒட்டியாணம்எல்லாம் அளவின் அடிப்படையில் விரலுக்கு மோதிரம், கைக்கு வளையல், இடைக்கு ஒட்டியாணம் என அனைவராலும் அறியப்பட்டவை.

இங்கு இந்த காதலி தனது காதலனை நினைத்து இளைப்பதாக சொல்வதற்கு தான் அணிந்திருக்கும் மோதிரம் அதனுடைய அளவில் பெரிதான வளையலாக மாறுவதாகப் பாடுகிறாள். அதே வளையல் அதைவிட பெரியதான ஒட்டியாணமாக மாறுவதற்குள் வந்துவிடு என்று பாடி அழைக்கிறாள். பாடல் காட்சியிலும் கூட நடன அசைவுகளில் ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டுவார் விந்தியா.
ஆக இளைத்து மேனி சிறுக்கும் ஒரு பிரிவில் எப்படி இப்படியொரு ட்ரான்சிஷன் என்று தோன்றுவது இயல்பு.

உண்மையில் இதனுடைய பொருளை வேறொரு பார்வையில் விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. விரலில் அணிந்திருக்கும் மோதிரம் வளையலாக மாறுகிறதென்றால் அது மோதிரத்தின் அளவு பெருத்து வளையலாக மாறுவதல்ல. அவளது விரல் இளைத்து எலும்பாக சிறுத்துப்போய் அவள் அணிந்திருந்த மோதிரம் அவளது விரலுக்கு இட்ட வளையல் போல தளர்ந்துவிட்டதாக பாடுகிறாள். அது இன்னும் தளர்ந்து விரலுக்கு மாட்டப்பட்ட ஒட்டியாணம் போல மாறுவதற்குள் வந்துவிடு என்று பாடுகிறாள்.

வருந்தி இளைக்கும் தனது உடலை பற்றி காதலி பாடுவதற்கு இப்படி ஆபரணங்களை அதன் அளவுகளைக்கொண்டு ஆவணப்படுத்தியிருப்பது கவிஞரின் ரசனை. இதே ரசனையை ‘நறுமுகையே’ பாடலிலும் கூட பதிவு செய்திருந்தார்.

“இளைத்தேன் துடித்தேன் பொறுக்க வில்லை
இடையில் மேகலை இருக்கவில்லை”

இங்கு மேகலையென்று சொல்லப்படுவது அதே ஒட்டியாணம் தான்.

எப்பொழுதும் போல வைரமுத்துவின் வரிகளுக்கு ஒரு பண்டைய இலக்கியப்பாடல் கிடைப்பது போல இந்த வரிகளுக்கும் ஒரு பாடல் கிடைக்கப்பெற்றது.

ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் இப்படியொரு பாடல் இருக்கிறது.

“மன்னு பெரும்புகழ் மாதவன்
மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை உகந்தது காரண மாகஎன்
சங்கிழக் கும்வழக் குண்டே”

பெரும்புகழ்கொண்ட மாதவன் மணிவண்ணனை தான் விரும்பிய காரணத்திற்காக தனது சங்கு வளையல்கள் கழண்டு விழுவது வழக்கிலுண்டோ என்று நியாயம் கேட்பது போல பாடப்பட்ட பாடல் இது. (சங்கிழக்கும் என்று சொல்வது சங்கினால் செய்யப்பட்ட வளையலை இழத்தல் என்று பொருள்).
இங்கும் வளையல் இழந்ததன் காரணம் கண்ணனை நினைத்து வாடி மேனி தளர்ந்து உருகியது தான்.

திருவள்ளுவரும் கூட தனது பங்கிற்கு இந்த நிலையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

“பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்”.

கலைஞர் உரை : பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.

இந்த குறளில் தொடி என்பது வளையல். சங்க காலத்தில் வளையலை தொடியென்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆக, பிரிவால் உடல் இளைக்கும் என்பதன் காட்சிப்பதங்கள் தான் இவை.
மேனி இளைத்து பிரிவை சுமத்தல், எடை குறைந்து இடை சிறுத்தல் எல்லாம் காத்திருப்பில் தர்மம் போல.


இளம்பரிதி கல்யாணகுமார்
29 December 2016
மஸ்கட்

Advertisements