தோழியொருவர் “நறுமுகையே” பாடலின் சில வரிகளை மிகவும் அழகான ரசனையில் சிலாகித்து எழுதியிருந்தார். அதில் “பாண்டி நாடனை கண்ட என்னுடல் பசலை கொண்டதென்ன” என்னும் வரிகளைப் பற்றி குறிப்பிடும்போது தலைவனின் துணையைப் பிரிந்து வாடும் தலைவிக்கு வரும் தனித்த நிலையை “பசலை” என்று பொருள்படுத்தியிருந்தார்.

“பசலை” யை இன்னும் ஆழமாக தெரிந்துகொள்ள முனைந்தபோது அதன் அர்த்தங்கள் பலதரப்பட்டதாக இருந்தன.

பொருள் :1:

சங்க காலத்தில் தலைவனைப் பிரிந்த தலைவியின் பிரிவாற்றாமையைத் தான் ‘பசலை’ நோய் என்று பாடியிருக்கின்றனர். இத்தகைய பிரிவுசூழ் தனிமை நாட்களில் பிரிவால் வாடும் பெண்ணின் முகப் பொலிவும் மேனி அழகும் பாழாகி விடுமென்பது பசலையின் வெளிப்பாடு.

இப்படிப்பட்ட துன்பியல் நிகழ்வை “பசலை பாய்தல்” என்று ” மனம் அழிந்த தலைவியின் மெய்ப்பாடுகள்” என்ற மெய்ப்பாடில் தொல்காப்பியம் தொகுத்து வைத்திருக்கிறது.
ஆக இந்த பசலை என்பது தொலகாப்பிய கால நோய். காதலுக்கும் பிரிவுக்கும் காலங்கள் ஏது. மனிதன் தோன்றியதும் காதலும் தோன்றியது. காதலோடு பிரிவும் தோன்றியது. அந்த பிரிவில் பசலையும் தோன்றிவிட்டது போல.

குறுந்தொகை பாடலொன்று பசலையை மேற்சொன்ன பொருளில் பயன்படுத்தியிருக்கிறது.

“கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே”

(“தீண்டாய் மெய் தீண்டாய்” பாடலின் தொடக்கத்தில் வைரமுத்து இந்த பாடலைத் தான் பயன்படுத்தியிருப்பார்)

பசுவின் கன்றாலும் குடிக்கப்படாமல், பாத்திரத்திலும் கறக்கப்படாமல் வீணாக நிலத்தில் வீழும் பாலைப் போல – நானும் மகிழ்ந்து கொள்ள முடியாமல், என் தலைவனும் அனுபவிக்க முடியாமல் இருக்கும் எனது அழகும் இளமையும் பசலையில் வீணாகப் போகிறதே என்று தலைவி தனது ஆற்றாமையை தோழியிடம் பகிர்ந்துகொள்வதாய் இந்த பாடல் பாடப்படுகிறது.

“எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது பசலை உணீஇயர் வேண்டும்” என்று இங்கு பசலையின் பொருள் மிகத்தெளிவாக பசலை நோயை சுட்டுகிறது.

திருக்குறளில் கூட பசலை கையாளப்பட்டிருக்கிறது.

“சாயலும் நாணும அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து“

உரை: காம நோயையும் பசலையும் கைமாறாக எனக்களித்து, என் அழகையும் நாணத்தையும் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்

பொருள் 2:

பசலைக்கு இன்னொரு பொருளாக “பொன்னிறம்” என்பதும் கிடைக்கப்பெற்றது.
அதற்குச் சான்றாக வரும் புறநானூற்றுப் பாடல் இது.


“பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்
கொண்பெருங் கானத்துக் கிழவன்
தண்தார் அகலம் நோக்கின் மலர்ந்தே”.

பாழூரில் நெருஞ்சிச் செடியின் பொன்னிறத்தைக் கொண்ட அழகிய பூவொன்று சூரியனை எதிர் நோக்கியிருப்பது போல், வறுமையுற்ற புலவர்களின் பாத்திரங்கள் புகழ்மிக்க கொண்கானங் கிழானின் நெஞ்சத்தை எதிர்நோக்கி திறந்திருக்கும் என்று
கொண்கானங் கிழானின் கொடையைப் பற்றி பாடப்படும் பாடல் இது.

இந்த பாடலில் வரும் ‘நெருஞ்சிப் பசலை வான்பூ’ என்னும் வரி ஒரு விதமான பொன்னிற இயல்பைத் தான் குறிக்கிறது.

சரி.
இப்பொழுது நறுமுகையே பாடலை எடுத்துக்கொண்டால் வைரமுத்து ‘பசலை’ என்னும் சொல்லை கீழுள்ளவாறு பயன்படுத்துகிறார்.

“பாண்டி நாடனை கண்ட என்னுடல் பசலை கொண்டதென்ன”

மான்விழி அம்புகளால் தலைவனின் மார்துளைத்த தலைவி அவனைக் கண்டதும் பசலை கொள்வதகாக எழுதியிருக்கிறார்.

ஆக, இங்கு பசலையானது இரண்டாம் பொருளாக “பொன்னிறமென” கொள்ளுதல் முறையாகிறது.தலைவனைக் கண்ட பூரிப்பில் தலைவியின் உடல் பொன்னென பொன்னிறமாக மின்னத்தொடங்குகிறது என்ற பொருள்.

அதே வேளையில் இன்னொரு பார்வையும் இதில் தேவைப்படுகிறது.
ஒருவேளை இந்த பாடலின் கதை போக்கு கடந்த கால ஞாபகங்களின் அசைவாக இருக்குமானால் இங்கு பசலைக்கு முதல் நிலை பொருளான பிரிவாற்றாமை தான் இருக்க வேண்டும்.
‘ஏதோ ஒரு நாள் நான் கண்ட அவனால் என்னுடல் இன்று பசலை கொள்கிறது; ‘அவன் இல்லாத இன்மையில் ஏகாந்தங்கள் கார்மேகம் சூழ்கின்றது’ ஆகிய பொருள்களில் கடந்து போனவனை எண்ணி கூடிக்கிடந்த நாட்களை தலைவி பாடுவதாக பொருள் படும்.

செய்வதெல்லாம் செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் அமர்ந்திருக்கும் இந்த ‘இருவர்’க்கு தான் உண்மையான பொருள் என்னவென்று தெரியும்.

எந்த பொருளில் விளங்கிக்கொண்டாலும்
தமிழுக்கு ஒரு பொருள்,
காதலுக்கு ஒரு பொருள்,
வைரமுத்துவுக்கும் ஒரு பொருள்.
அந்த பொருள் – பேரானந்தம்.


இளம்பரிதி கல்யாணகுமார்
28 December 2016
மஸ்கட்
Advertisements