ஒரு பயணம். அனுபவத்திற்கான தேடல். வாழ்க்கையின் சில நொடிகளுக்காக வடிவமைக்கப்பட்ட திருப்பம். அதனூடே ஒரு இசை. இசையின் நூலில் நெய்யப்பட்ட காதல். ஒரு முழு திரைப்படம்.

இசையும் களமும்

பிரதானமாக சொல்லப்படவேண்டியது இசையும் அதன் தன்மையும் தான். தேவையான இடங்களில் அதன் இயல்பில் இசையை ஒலிக்கச் செய்வது ரஹ்மானின் மெக்கானிசம். அது அதிகம் பரிட்சயப்பட்டது நமது மணிரத்னம் படங்களில் தான்.
‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தில் சிறந்த பாடல் எதுவென்று கேட்டால் ‘விடை கொடு எங்கள் நாடே, ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற standardized பார்வை வெகுபலரிடம் இருக்கக்கூடும். ஆனால் அதையும் தாண்டி அந்த திரைப்படத்தில் பின்னணியில் ஒரு வரும் பாடல் இயக்குனரும் இசையமைப்பாளரும் கவிஞரும் ஒரு காட்சியை எப்படி கையாளுகிறார்கள் என்று சொல்வதற்கு ஆகச்சிறந்த பைபிளாக இருக்கும். ‘கல்யாணத்துக்கு எனக்குன்னு சில conditions இருக்கு’ என இந்திரா சொல்லி முடிப்பதற்குள் சட்டென திரு அணைத்துக்கொள்ள அங்கு மின்மினியின் குரலில் ‘சட்டென நனைந்தது நெஞ்சம்’ என்று பின்னணியில் ஒலிக்கத் தொடங்கும். அது காட்சியமைப்புக்கான இசை. தேவைக்கான பாடல். தேவைக்கேற்ப உப்பு என்று எல்லா சமையல் நிகழ்ச்சிகளிலும் ஒரு cliche அறிவுரை போல இந்த தேவைக்கேற்ப இசையில் ரஹ்மானும் மணிரத்னமும் Master-chef .

மணிரத்னத்தைப் போலவே அழகியல் இயக்குனராக சமகாலத்தில் முன்னெடுக்கும் கெளதம் மேனன் இந்த திரைப்படத்தில் தனது பாடல்களுக்கான காட்சியமைப்பின் மூலம் மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார்.
(ஆனால் எனக்கு நீதானே பொன்வசந்தம் அத்தனை இயல்பாக தெரியவில்லை)

‘நம்ம சிறகுகளே இந்த bikeங்க தானே இந்த உலகினிலே முதல் தேவையே’ என்று சிலம்பரசனை அறிமுகப்படுத்தும் விதமாக இருக்கட்டும், பயணத்தின் வேகத்தை ராசாளியிடம் challenge செய்வதாக இருக்கட்டும், இருவரின் தனிமையை லயிக்கும் அவனும் நானும் ஆகட்டும் அனைத்தும் காட்சிக்கு பொருத்தம். இரண்டாம் பாதியில் பாடல்கள் தேவையில்லை என்று நினைத்ததும் அதே அழகியல் சார்ந்த இயக்கம் தான்.

ஒரு பாடலுக்கான காட்சியமைப்பை வெறும் dance என்று அடக்காது அதை choreography என்று சொல்வார்கள். choreographyஐ designing என்று கொஞ்சம் polishedஆக செயல்படுத்துகிறார்கள். அது நடன அசைவுகளை காட்சியாக வெளிக்கொணரும் கலை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் ‘திருடா திருடா’ திரைப்படத்தில் வரும் ‘ராசாத்தி’ பாடலும் ‘மின்சாரக்கனவு’ திரைப்படத்தில் ‘வெண்ணிலவே’ பாடலும் எடுக்கப்பட்ட விதங்களை சொல்லலாம்.
இரண்டு பாடல்களிலுமே நடன அசைவுகள் வெகு குறைவு. பாடல்வரிக்கான முகபாவனைகளை காட்சியில் தத்ரூபமாய் காட்டியிருப்பார்கள். இந்த பாடல்களுக்காக முறையே சுந்தரம் மற்றும் பிரபுதேவா தேசிய விருதுகள் வென்றது அந்த காட்சியமைப்புக்கான வெற்றி. அப்படியிருக்கும் choreographyயில் concept director என கெளதமின் பெயர் title cardல் பார்த்த பொழுது புதியதாய் இருந்தது. அந்த புதுமையின் தாக்கம் தள்ளிபோகாதே-யில் கொஞ்சம் கூட தள்ளிப்போகவில்லை.

இசையும் குரலும்

ரஹ்மானின் இசையில் குரல் தேர்வுகள் குறித்து ‘வேற்று மொழி பாடகர்கள்’, ‘வார்த்தையை விழுங்கும் குரல்கள்’ என பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால் அவர் அந்த விமர்சங்களுக்கு வழக்கம் போல மௌனத்தையும் வெற்றியையுமே பதிலாக அளித்து வருகிறார். அனைத்து பாடகர்களின் interviewலும் ராஜா ரஹ்மான் எப்படி வேறுபடுத்துகிறீர்கள் என்று சரளமாக ஒரு கேள்வியைக் காண முடியும் . அதற்கான பதில்களாக இருவருக்குமான குரல் சுதந்திரங்கள் என்று கூறுவார்கள். சமீபத்திய பேட்டியொன்றில் கூட மனோ ‘முக்காலா‘ பாடல் பதிவின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டபோது ‘மெஹபூபா’ பாடலின் குரலைப்போல பாட விரும்பி, அதை ரஹ்மான் ஏற்றுக்கொண்டதாக கூறியிருந்தார்.

‘சும்மா கிடந்த கல்ல கூட நடிக்க வச்சவர் பாரதிராஜா’ என்று ஜம்பமாய் புகழ்ந்த பாரதிராஜாவை கூட ‘காடு பொட்டக்காடு’ என்று பாட வைத்து ஆர்ச்சர்யப்படுத்தியவர் இந்த ரஹ்மான்.
இந்த படத்தைப் பொறுத்தவரை அத்தனை தெரிவுகளும் இசைக்கான நேர்மையை செய்திருக்கின்றன.

தமிழின் அபிமான பாடகர்கள் அத்தனை பேரையும் பயன்படுத்திய ரஹ்மான் இரண்டாவது முறையாக விஜய் யேசுதாஸை பயன்படுத்தியது இந்த பாடலில் தான் (முதல் பாடல் அனைவருக்கும் பரிட்சயப்படாத சித்திரை நிலா -கடல்).
ரம்மியம் என்பதன் பொருள் இந்த பாடலில் ஒலிக்கும் விஜய் யேசுதாஸின் குரல் தான். வேறொரு குரலை நினைத்துப்பார்க்க முடியாத அவளில் அந்த பாடலின் குரல் இன்னும் அகலாது இருக்கிறது.

.
‘ஐலா ஐலா’ என அத்தனை துள்ளலான பாடலையும் மிருதுவாக தந்த ஆதித்யா ராவ் இதில் அற்புதத் தேர்வு.


ரஹ்மான் சில காலங்கள் ஒரு பாடகருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்துக்கொண்டே இருப்பார். ஆரம்பத்தில் ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன், சின்மயி, கார்த்திக் போல சமீபத்திய செல்லப்பிள்ளையாக சித் ஸ்ரீராம் இருக்கிறார். (சித் ஸ்ரீராமின் குரலை ரசிப்பவர்கள் அவரின் நிலா காய்கிறது- unplugged versionஐ ரசிக்க வேண்டுகிறேன்.) அவரைப்போலவே சத்யபிரகாஷும் இன்னும் சில பாடல்களில் நிச்சயம் இருப்பார் என்றே ராசாளியின் வெற்றி நிரூபிக்கிறது.

(மன்னிக்க வேண்டும் ரஹ்மான். சோக்காளியை உங்களது பாடலாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை)

இசையும் வரிகளும்

இதைப்பத்தி எதுவுமே சொல்லாமல் ரசித்துக்கடப்பதே ரசித்துக்கிடப்பதே நான் நேர்மையாக கருதுகிறேன். இன்னும் கெளதம் மேனனும் தாமைரையும் இணைந்து எப்பொழுதும் செயல்பட வேண்டுமென்றே ஆசையாய் இருக்கிறது.

“வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல”,

“ஏன் முதல் முத்தம்
தர தாமதம் ஆகுது.?
தாமரை வேகுது..!”

இதெல்லாம் தாமரையின் தாமரைக் குறியீடும் இசையின் ஆவர்த்தனமும். அழகியலின் மொத்த வேட்கையம் தமிழின் இழைகளில் சிலிர்க்க வைக்கின்றன.

(நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை,

தாமரை இலை நீர் நீ தானா
தனி ஒரு அன்றில் நீ தானா

இதுவும் தாமரை-கௌதம் மேனன் தான்)

‘அவளும் நானும்’ பாடல் பற்றி நிச்சயம் பகிரப்பட வேண்டும். வைரமுத்து ஊரில் இல்லையென்று அவரது கவிதை புத்தகத்தை வாசித்து ‘மூங்கில் தோட்டம் ‘ பாடலை வைரமுத்து இல்லாமலே பாடலாக கோர்த்து எழுதி நடைபடுத்தி இசையமைத்து வெற்றியடைந்த ரஹ்மான் இதில் நம்மோடு இல்லாத பாவேந்தரை தொட்டு பார்த்து வெற்றியடைந்திருக்கிறார்.

இசையும் படமும்

சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘‘உங்கள் திரைப்படங்களில் தங்கச்சி friendஅ லவ் பண்ற மாதிரி வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற மாதிரி சில காட்சிகள் repeated-ஆ வருகிறதே’‘ என்று ஒருவர் கேள்வி கேட்க ஒரு இயல்பான கலைத்திமிருடன் பதில் சொல்லும் கெளதம் இறுதியாக “நல்லா தண்ணியடிச்சிட்டு எந்த சுயநினைவும் இல்லாம படத்துக்குப் போய் என் படத்த பாத்தா கூட இது கௌதம் மேனன் படம் டா என்று சொல்லுவான்” என்று முடிப்பார். அதைப்போலவே இந்த படம் முழுவதும் கௌதம் கெளதம் மேனனின் நடுத்தர குடும்பத்து அக்மார்க் காட்சிகளும், ஆங்கில புலமைகளும், கழுத்து எரிவதை காதலாய் காட்டும் காதல் வசனங்களும் என பயணம் நெடுகிலும் நிறைந்து கிடக்கின்றன. இந்த திறமையினாலே ‘மணிரத்னம் படம், சங்கர் படம்’ என்ற brandகளில் ‘கௌதம் படம்’ என்ற brand என்றோ இணைந்து விட்டது.
அதே சந்திப்பில் “நான் இதுவரைக்கும் முயற்சி செய்யாத மாஸ் லைன தொட்ருக்கேன் என்ன compromise பண்ணிக்காம” என்று ஒரு தகவலை சொல்லியிருந்தார். அன்புச்செல்வன், ராகவனிடமே அனைத்து மாஸ்களையும் பார்த்திருக்கிறோம் என கௌதமிற்கு ஞாபகப்படுத்த வேண்டுமென்று தோன்றியது.
ஆனால் படம் பார்த்த பிறகு அந்த லைன் சிம்புவிற்காக போடப்பட்ட்டது என்று தோன்றியது

ப்ளீஸ் கெளதம் – அந்த மெலிசான கோட்டுக்கு அந்த பக்கம் நீங்கள் செல்ல வேண்டாம். அது உங்களுக்கு ஆபத்தான பகுதி. ஆனால் சிம்பு விக்டராக இருப்பதால் பிழைத்துக்கொள்வார். (பிழைத்துக்கொண்டார்).

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் காதலர்கள் சேர்வது போலவும் பிரிவது போலவும். இரண்டு கிளைமாக்ஸ்கள் இருந்தன. மக்கள் ஏற்றுக்கொண்டது என்னவோ பிரிந்து போகிற கிளைமாக்ஸ் தான். அதே போல இந்த படத்திலும் கடைசி ஒரு 15-25நிமிடங்களை ஆண்டனியிடம் கூறி எடுத்துவிட்டு ப்ரி -கிளைமாக்சில் படம் வருமானால் இந்த படம் வேறொரு தளத்தில் இப்பொழுது இருக்கும் வரவேற்பை விட அதிக ஆதரவுடன் நிச்சயமாக தாண்டி நிற்கும்.

ஏனென்றால் திரையரங்கில் அந்த இறுதி நேர மசாலா தூவலுக்கு சிரிப்புச்சத்தம் தான் பலமாக இருந்தது.

கௌதம் மேனனுக்கு இன்னொரு விண்ணப்பம் தயவுசெய்து டேனியல் பாலாஜியை மற்ற இயக்குனர்களுக்கும் சிபாரிசு செய்யவும்.

நானும் நானும்

நான் கௌதமின் ரசிகன் ரஹ்மானின் பரமரசிகன். எனக்கு தேவையானதை மட்டும் படத்தில் இருந்து எடுத்துக்கொண்டேன். இது மற்றொரு Modern அழகியல் stuffed with commercial ingredients.

பயணத்தை மையப்படுத்திய கதைக்களத்தில் இசையும் பின்னணியும் காட்சியமைப்பும் அத்தனை இலகுவாய் அமைய என்பதற்கான முஸ்தீபுகளில் ஒரு இயக்குனரும் இசையமைப்பாளரும் எத்தனை விதமான உரையாடல்களை செய்திருப்பார்கள் என்று எண்ணவே ஆர்ச்சர்யமாக இருக்கிறது. கௌதம் மேனன் அந்த உரையாடல்களை உரையாடல் and stuff என்று பாடல்கள் வெளியீட்டின் சமயத்தில் வெளியிட்ட விடியோக்களை மீள்பதிவு செய்யலாம்.

இளம்பரிதி கல்யாணகுமார்
November 14 2016

மஸ்கட்

Advertisements